நாகூர் சிவன் கோவில் கீழ மடவிளாகத்தை சேர்ந்தவர் முத்து தியாகராஜன் (82).
இவர் வடகுடி கிராமம் திருமேனி அழகர் சிவன் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவாக
இருந்து வந்தார்.
இவர் தனது மகன் செந்தில் நாதனுடன் வசித்து வந்தார். நேற்று மதியம் முத்து
தியாகராஜன், அவரது மகன் செந்தில் நாதன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். மாலை 6
மணியளவில் 6 பேர் கும்பல் அங்கு வந்தது.
அக் கும்பல் முத்து தியாகராஜனை பிடித்து கீழே தள்ளி 2 கால்களையும்
கயிற்றால் கட்டியது.
அவரது கழுத்தை நெரித்த படி வடகுடி திருமேனி அழகர் சிவன் கோவிலின் தங்க நகைகளை எங்கு வைத்துள்ளாய்? என்று ஆயுதங்களை காட்டி மிரட்டியது. சத்தம் கேட்டு அவரது மகன் செந்தில் நாதன் ஓடி வந்தார். அவரையும் அக்கும்பல் தாக்கி கயிற்றால் கட்டி தனி அறையில் தள்ளி விட்டது. பின்னர் முத்து தியாகராஜனை மிரட்டி நகை இருக்கும் இடத்தை கேட்டது. 6 பேர் கும்பல் கழுத்தை நெரித்ததில் முத்து தியாகராஜன் மயங்கி விழுந்தார்.சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் பயந்து போன கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சற்று நேரத்தில் செந்தில் நாதன் தன்னை கட்டிய கயிற்றை அவிழ்த்து கொண்டு வெளியே வந்தார்.தந்தை இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், டி.எஸ்.பி. நீதிமோகன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துதியாகராஜன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமேன அழகர் சிவன் கோவிலில் கொள்ளையர்கள் புகுந்து 5 வெண்கல சுவாமி சிலைகளை திருடிச் சென்றனர். இது குறித்து முத்து தியாகராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலை திருடிய கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்பட்டது. அந்த சிலைகள் தற்போது திருவாரூர் பெரிய கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது முத்து தியாகராஜனிடம் நகைகளை கேட்ட கும்பல் சிலை கடத்தல் கும்பலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கோவில் நகைகளை கேட்டு தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: http://www.maalaimalar.com/2012/08/29122547/temple-gold-Trustee-killed-nag.html
0 comments:
Post a Comment